கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க உதவ வேண்டும் என தமிழக மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ ஆப்டெக்ஸ் கடைகளில் கைத்தறி துணி வகைகளை வாங்கி நெசவாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க உதவுங்கள் என தெரிவித்துள்ளார். கைத்தறித் தொழில் தமிழகத்தில் 3 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது நலனுக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். விலையில்லா வேட்டி, சேலை திட்டம், விலையில்லா சீருடை திட்டம், நெசவாளர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கைத்தறி தொழில் வளரவும், நெசவாளர் வாழ்க்கை மேம்படவும் தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கைத்தறித் தொழில் சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.