வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்காக நவம்பர் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனா நதி, இராம நதி, கருப்பா நதி நீர்த்தேக்கங்களில் இருந்து பிசான பருவ சாகுபடிகளுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள 32,025 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்பு பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.