தமிழ்நாடு

“என்.பி.ஆர்., என்.ஆர்.சி-யை முதலமைச்சர் அனுமதிக்ககூடாது” - மு.க.ஸ்டாலின்

“என்.பி.ஆர்., என்.ஆர்.சி-யை முதலமைச்சர் அனுமதிக்ககூடாது” - மு.க.ஸ்டாலின்

webteam

தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) மற்றும் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகிய இரண்டையும் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு மவுனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். மத்திய பாஜக அரசு தற்போது மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி திசை திருப்புவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை பாஜக கூட்டணியில் இருக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும், பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாம் அரசும் எதிர்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி-யை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால், நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.