முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவு, நாட்டிற்கே பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நாட்டின் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில், மக்களின் நன்மை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரிசை அறிமுகப்படுத்தியவர் என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசியவர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக்கூடிய பண்பாளர் என முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். அருண் ஜெட்லியின் மறைவு, அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, பாஜக தொண்டர்களுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு எனவும் முதலமைச்சர் பழனிசாமி தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.