தமிழ்நாடு

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்”- ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்”- ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி

Rasus

கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டதில் நேரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். ஆய்வின்போது,  புயலால் உயிரிழந்தவர்களின் 6 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் வழங்கினார். இதுதவிர புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதம் அடைந்துள்ளது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். யாரும் விடுபட மாட்டார்கள். புதுக்கோட்டை நகருக்குள் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். புதுக்கோட்டை கிராம பகுதிகளில் 5 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். இயற்கை சீற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை முன்கூட்டியே கணிக்க இயலாது. புயல் வருவதற்கு முன்னதாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வோருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப முடியும். நம்முடைய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். கஜா புயல் நிவாரணம் தொடர்பாக 22-ஆம் தேதி பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. பேரிடரின் போது கேரளாவை போல் தமிழக எதிர்க்கட்சிகள் செயல்படவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.