தமிழ்நாடு

நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும்: முதல்வர் உறுதி

நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும்: முதல்வர் உறுதி

Rasus

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த 20-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வுக்கு சென்றதால் அது பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சர் அங்கு சென்றுள்ளார். இதற்காக நேற்று ரயில் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் இன்று காலை நாகை சென்றடைந்தார். பின்னர் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

புயலால் பாதிக்கப்பட்ட பி.ஆர்.புரம் மக்கள், முதல்வரிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதற்கு முதலமைச்சர் பழனிசாமி, மக்களின் குறைகளை தெரிந்து அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும் என கூறினார். முதலில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யப்பட்டு பின் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி திருவாருர் மாவட்டத்தில் ஆய்வு நடத்த உள்ளார்.