சூடானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சூடான் நாட்டில் இயங்கிவரும் செராமிக் டைல்ஸ் கம்பெனியில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த நாகை மாவட்டம் அகரகொந்தகை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், கடலூரைச் சேர்ந்த ஜெயக்குமார், ராஜசேகர் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, ''மூவரின் உயிரிழப்பு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தூதரகம் மூலம் இறந்தவர்களின் உடலினை இந்தியா கொண்டு வர உதவிகள் செய்யுமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டேன். அதன்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளார்.