தமிழ்நாடு

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு தலா‌ 2 ஆயிரம்

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு தலா‌ 2 ஆயிரம்

Rasus

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியுதவியாக தலா‌ 2 ஆயிரம் ‌ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்களுக்கு இந்தாண்டு இந்தச் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்றார். இதேபோல் கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும், காலணி மற்றும் தோல் பொருள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்டோருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்தார்.

கஜா புயலின் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியாலும் ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நிதியுதவி அறிவிக்கப்படுவதாகக் முதலமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம் 35 லட்சம் கிராமப்புற ஏழைக் குடும்பங்கள், 25 லட்சம் நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார். இத்திட்டத்திற்கு தேவையான ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் நிதி, 2018-19 ஆம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.