தமிழ்நாடு

அத்தி வரதர் வைபவத்தில் இறந்தோருக்கு ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

webteam

அத்தி வரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 48 நாட்கள் அவர் காட்சியளிக்கவுள்ளார். இதனை தவறவிட்டால் மீண்டும் 40 வருடங்களுக்குப் பின்னர் தான் அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கூட்டம் அலை மோதுகிறது.

இந்நிலையில் இன்று கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்தி வரதரை தரிசிக்க நீண்ட கூட்டம் வரிசையில் நின்ற போது, கூட்டம் திறந்துவிடப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய நடராஜன், கங்காலட்சுமி, நாராயணி ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். அவர்களை தொடர்ந்து மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விரிவான தகவல் கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இவ்வளவு கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், திருப்பதியில் கூட ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேர் தான் வந்து செல்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அத்தி வரதரை தரிசிக்க ஒரு லட்சத்திற்கும் மேலானோர் வந்து செல்வதாக கூறியுள்ளார்.