தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி எம்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு தங்கும் அவர், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அண்மையில் பேசிய முதலமைச்சரும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து மோடியிடம் ஆலோசிக்க உள்ளதாக கூறியிருந்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுநருடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது பிரதமரை முதலமைச்சர் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இரவு டெல்லி சென்ற முதலமைச்சர், டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தாக டிடிவி தினகரன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று எம்.பிக்களை சந்திக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.