தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

webteam

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கும் கோப்பில் கையெழுத்திட்டு பாவம் செய்துவிட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. அதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால் திமுக வழக்கு தொடர்ந்தது. இதை அவசர வழக்காக அன்று இரவே உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மேலும் வழக்கை காலை விசாரிப்பதாக அறிவித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர். 

அதன்பின் அவரது உடல் சென்னை அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கருணாநிதி நினைவிடம் அருகே நாள்தோறும் ஏராளமான திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கும் கோப்பில் கையெழுத்திட்டு பாவம் செய்துவிட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், இடம் ஒதுக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக் கோப்பில் முதல்வர் பழனிசாமி இதுவரை கையெழுத்திடவில்லை என்றும் கூறியுள்ளார். தானும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தான் கையெழுத்திட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.