கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா செல்ல இருக்கிறார்.
கடும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் வடபகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஆந்திராவிடம் இருந்து கிருஷ்ணா நதிநீரைப் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு நாளை செல்கின்றனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவுடன் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.
தமிழக முதல்வரின் கடிதத்தைத் தொடர்ந்து கிருஷ்ணா நதிநீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது. தமிழகத்தின் குடிநீர் தேவையைச் சமாளிப்பது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் கிருஷ்ணா நிதி நீரை பகிர்ந்து கொண்டதற்காக தமிழக தரப்பிலிருந்து தங்களுக்கு 400 கோடி ரூபாய் வர வேண்டியிருப்பதாக ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடு தெரிவித்துள்ளார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது கிருஷ்ணா நதி நீர் திட்டமாகும்.