அவசரச் சட்டம் நிறைவேற்றப்படுவதே நிரந்தரத் தீர்வுதான் எனவும் யாரும் அச்சமோ சந்தேகமோ கொள்ளத் தேவை இல்லை என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் அவசரச் சட்டத்தின் படி ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். வரும் 23ம் தேதி தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த அவசரச் சட்டத்திற்கான முன்வடிவு கொண்டு வரப்பட்டு முழுமையான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அவசரச் சட்டமானது 6 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அதற்குள் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.வரும் சட்டமன்ற கூட்டத்திலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு உரிய சட்டம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். இதற்கு முன்பு இந்த சட்டம் ஏன் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பன்னீர் செல்வம், இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது என்று பதிலளித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தின் உரிமைக்கு பங்கம் ஏற்பட்டால் அதைப் பெற்றுத் தருபவராக ஆட்சி நடத்தினார் எனக் குறிப்பிட்டார். 2006ல் இருந்து ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்குவதற்காக அவர் போராடி வந்திருக்கிறார் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தமிழக அரசின் சார்பிலும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சார்பிலும் ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் அச்சப்படவோ சந்தேகப்படவோ வேண்டாம் என்றும் முதலமைச்சர் கூறினார். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டால் அதற்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் கூறியதாக தெரிவித்த பன்னீர் செல்வம் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தப் பிரச்னையில் சட்டத்தின் வழி நின்று சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதுமின்றி போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். அவர் மீது எழும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, பொது வாழ்க்கையில் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்றார்.