தமிழ்நாடு

”Law & Order கெடாமல் தமிழகம் அமைதியா இருக்கேனு வயிறு எரிகிறார்கள்” -மு.க.ஸ்டாலின் பேச்சு!

JananiGovindhan

அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களின் புதிய திட்டப்பணிகள் அடிக்கல்நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற 74 பணிகளை 252 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் தொடங்கி வைத்தும், 32 கோடியே 94 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் 57 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 36 ஆயிரத்து 691 பயணாளிகளுக்கு 78 கோடியே 3 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திய, தொடங்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பினை செய்தார். கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க தனி சிமெண்ட் காரிடர் சாலை அமைக்கப்படும் என்றும், தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் தொழில் திட்டங்களால் இந்திய அளவில் தொழில் துறையில் தமிழகம் முதல் மாவட்டமாக திகழ்கிறது என்றும் கூறினார். இதுபோக, எதிர்வரும் சில ஆண்டுகளில் பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் தமிழகத்தில் இருக்கக்கூடாது எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாதோ அதற்கு உதாரணமாக கடந்த 10 ஆண்டு கால ஆட்சி இருந்தது. அவர்களின் கையாலாகாதனத்தால் தமிழகம் பின் தங்கி இருந்தது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர். அதை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டு புகார் கொடுக்கிறார்கள்.

சட்டம் ஒழங்கு கெட்டுவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார்கள். சிலர் சட்டம் ஒழுங்கு கெடவில்லையே என எதிர்பார்க்கிறார்கள். தமிழகம் அமைதியாக இருப்பதை கண்டு வயிறு எரிகிறார்கள். புலிக்கு பயந்தவர்கள் என் மீது வந்து படுத்துக்கொள்ளுங்கள் என்பது போல, தமிழக அரசு மீது புகார் கூறுபவர்கள், இருக்கும் பதவி நிலைக்குமா என தெரியாமல் இருப்பவர்கள். ஆபத்து, ஆபத்து என்கிறார்கள். பயப்படாதீர்கள். மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

விமர்சனங்கள் செய்யலாம். அதற்கு உங்களுக்கு தகுதி இருக்க வேண்டும். உலக மகா உத்தமர்கள் போல பேசுகிறார்கள். தமிழகத்தை மீண்டும் உயர்த்துவதே எங்கள் குறிக்கோள். அதற்காக எங்களை ஒப்படைத்து செயல்படுகிறோம். எங்கள் உழைப்பால் அத்தகைய உயர்வை தமிழகம் அடையும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பண்ணீர்செல்வம், ரகுபதி, சிவங்கர், கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்கள் ஆ.ராசா, திருமாவளவன், எம்.எல்.ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வரவேற்புரை ஆற்ற, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா நன்றியுரை ஆற்றினார்.