சென்னை கலைவாணர் அரங்கில் 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, திரைப்பட சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட 30 பேருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
2022ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 30 பேருக்கும் முதல்வர் அளித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை இயக்குநர் கே.மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட 30 பேருக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதே போல இயல் பிரிவில் பாரதியார் விருது முனைவர் ந.முருகேச பாண்டியன், இசைபிரிவில் எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கும், நாட்டியம் பிரிவில் பாலசரசுவதி விருது முத்துக்கண்ணம்மாள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப் பதக்கமும் விருதுப் பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது. தங்கம் விலை தினமும் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கிறது. விருது அறிவித்தபோது இருந்த தங்கம் விலையையும், விருது கொடுக்கப்பட்டபோது இருக்கும் தங்கம் ஒப்பிட்டாலே தெரியும். தங்கத்தைவிட கலைமாமணி பட்டத்துக்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால், கலைமாமணி தமிழ்நாடு தரும் பட்டம். கலைமாமணி புகழ் சேர்க்கும். பட்டத்துக்குதான் மதிப்பு அதிகம்" எனத் தெரிவித்திருக்கிறார்.