விஸ்வகர்மா திட்டம் web
தமிழ்நாடு

“பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது”- மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

கைவினைஞர்கள் நலன் எனக்கூறி அறிவிக்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Rishan Vengai

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2023-ம் ஆண்டு விஸ்வகர்மா யோஜனா எனும் புதிய திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் படி கைவினைஞர்கள் முதலிய பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், பொம்மைகளை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயாரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் போன்ற பல தொழில்கள் சேர்க்கப்பட்டன.

PM Vishwakarma Scheme

ஆனால் இத்திட்டம் மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வருவதற்கான முயற்சி என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் “பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது” என முதல்வர் முக ஸ்டாலின் இன்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது..

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது; சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு” என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியிருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டிய மூன்று மாற்றங்களான,

“1.விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

2. இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும்.

3. கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்”

முதலியவற்றை மத்திய அரசு பரீசலிக்கவில்லை என்பதை தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர்.

அனைத்து கைவினைஞர்கள் நலனுக்குமான திட்டம் உருவாக்கப்படும்..

கடிதத்தின் முடிவில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது. இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

மேலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் பெருமைபடத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.