தமிழ்நாடு

அக்.31 வரை அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

அக்.31 வரை அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Sinekadhara

கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கை உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், செப்டம்பர், அக்டோரில் கொரோனா 3ஆம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும், தொற்று தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகள், சமூகம், மதக் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார். விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தலைவர்களை சார்ந்த குடும்பத்தினர், பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தலா 5 பேர் உரிய அனுமதியுடன் விதிகளை பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய்த் தடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறும், பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக, கேரளாவுடனான பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். கடைகள், மக்கள்கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.