சென்னை கொளத்தூரில் மக்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின், அரசு நலத்திட்டங்களை தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடி செலவில் குளிரூட்டப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூபாய் 17.47 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி என 2 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கொளத்தூர் என்றால் உற்சாகம், எனர்ஜி, வேகம் மற்றும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. கொளத்தூர் என்று சொன்னால் சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள். கொளத்தூர் தொகுதி என்றால் சிலருக்கு பொறாமையாகவும் இருக்கிறது. கொளத்தூர் தொகுதி மட்டும் நம்ம தொகுதியல்ல அனைத்து தொகுதியும் நம்ம தொகுதி தான். பத்து நாட்களுக்கு ஒரு முறை கொளத்தூருக்கு வந்தால் தான் திருப்தி ஏற்படுகிறது. கொளத்தூர் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளேன். கிண்டியில் உள்ள மருத்துவமனை விட கொளத்தூர் அரசு மருத்துவமனை சிறந்தது” என கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எப்பொழுதும் நல்ல பிள்ளையாக இருக்கிறேன். மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் இவர்கள் படிப்பதற்கு ஏதுவாக நாம் உருவாக்கியுள்ள இடம் முதல்வர் படைப்பகம். வெளிநாட்டில் இல்லாத அளவிற்கு வண்ணமீன் வர்த்தக மையத்தை உருவாக்கியுள்ளேம். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக மினி ஸ்டேடியங்களை கட்டியுள்ளேம். 10,11 மற்றும் 12 மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கு ஏதுவாக அனிதா அகாடமியை உருவாக்கியுள்ளேன். மணமக்களை வாழ்த்தும் போது மனைவி சொல் கேளுங்கள் என்றி மணமகனை கேட்டுக்கொண்டதோடு 16 செல்வங்கள் பெற்று வாழுங்கள் என்று கூறினார். மணமக்களிடம் பிறக்கும் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயரைச்சூட்டுங்கள் என வேண்டுகொள் விடுத்தார்.