முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

“உறுதியான தூதரக நடவடிக்கைகள் அவசியம்” - மீனவர்கள் கைதுகளை தடுக்க முதல்வர் கடிதம்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

ஜெ.நிவேதா

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், “25.01.2025 அன்று ரமேஸ்யாம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது. இப்படியாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

எனவே, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.