ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையும் குறிப்பிட்ட அளவு பாதிப்பினைச் சந்தித்துள்ளது. சென்னை கொளத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் காலை முதலே மழை நீர் அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பகுதிகளில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக, செல்வி நகர்ப்பகுதியில், அங்கிருக்கும் மக்களுடன் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகளையும் அரசு சார்பில் செய்யப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் விசாரித்தார். கொளத்தூரில் அடுத்தடுத்த 4 இடங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
ஆய்வின்போது புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கோடம்பாக்கத்தில் மழை நின்றுவிட்டால் அந்தப் பகுதியில் தண்ணீர் விரைவில் வடிந்துவிடும். அது ஒன்றும் பிரச்னை இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றிலுருந்து மழை பெய்து வருகிறது. அமைச்சர்கள் அங்கு இருக்கின்றனர். மின்சாரப் பிரச்னை இருப்பதால் மின் துறை அமைச்சரையும் அங்கு அனுப்பிவைத்துள்ளேன். போக்குவரத்துத் துறை அமைச்சரும் சென்றுள்ளார். மூத்த அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகளை நாங்கள் மதிப்பதில்லை. கவலைப்படுவதுமில்லை. புதிய தலைமுறை வாயிலாக இதை பதிவு செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.