CM Stalin- Kavin FB
தமிழ்நாடு

ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆறுதல்..!

காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் கூறினார்.

Vaijayanthi S

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவருக்கு 26 வயதான கவின்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

தொடர்ந்து, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த தெருவில் வைத்து அவரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சுர்ஜித்

அப்போது அங்கிருந்த சிசிடிவியின் மூலம், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் 24 வயது மகனான சுர்ஜித் என்பவர்தான் கவினை வெட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. கவின்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தன் அக்காவிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை என்பதால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் சுர்ஜித். இதனையடுத்து சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

கவின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்த உறவினர்கள்

கவின் உடலை வாங்காமல் பேராட்டம் நடத்திய பெற்றோர்

மேலும், சுர்ஜித்தின் தந்தையான சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வரும் நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கவின்குமார் கொலையில் அவர்களின் தூண்டுதலும் இருப்பதாக குற்றம்சாட்டினார். அதனால் அவர்களை (தந்தை , தாய்) கைது செய்து சிறையில் அடைக்கும் வரை கவின்குமார் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

கவின்குமார் உடலை வாங்க சம்மதம் தெரிவித்த பெற்றோர்

தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்துள்ள நிலையில், கவின்குமார் உடலை வாங்குவது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிவு எட்டப்பட்ட நிலையில், 5 நாள் போராட்டத்திற்கு பிறகு கவின்குமார் உடலை வாங்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த ஆகஸ்ட்1ஆம் தேதி சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து கவின்குமார் ஆணவப் படுகொலை வழக்கு விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது தந்தை சந்திரசேகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

சுபாஷினி - சுர்ஜித் - கவின்

கவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் இன்று கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் கூறினார் .