முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

”பொய் வழக்குகளை போட முயற்சி.. பேராபத்து” - பதவிபறிப்பு மசோதாவிற்கு முதலமைச்சர் கண்டனம்

அரசியலமைப்பின் 130வது திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு பேராபத்தானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

PT WEB

30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழி செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த 130ஆவது திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு பேராபத்தானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனைக்குரிய தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர், மாநில அமைச்சர்கள் பதவியை பறிக்கும் வகையிலான மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தக்கூடிய 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

AmitShah

இது அரசமைப்புக்கு எதிரானது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதா நகலை கிழித்து அமித் ஷா மீது எறிந்தனர். அமளி தொடர்ந்ததால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 3 மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 30 நாட்கள் கைது செய்யப்பட்டாலே முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் வகையில் பாஜக அரசு மசோதா கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விசாரணையோ, தீர்ப்போ இல்லாமல் பதவி நீக்கம் என்பது ஜனநாயகத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட முயற்சி” : முதல்வர்

வாக்கு திருட்டு வெளிப்படையாகியுள்ள நிலையில், தேர்தல் மோசடியை மறைத்து மக்களின் கவனத்தை மாற்றும் நோக்கத்துடன்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இது மாநில அரசுகளை மிரட்டவும், எதிர்க்கட்சித் தலைவர்களை வழக்குகளில் சிக்கவைத்து அகற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயகத்தின் அடித்தளத்தை குலைக்கும் இந்த கருப்பு மசோதாவை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் இது நிராகரிக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.