மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 11ஆம் தேதி சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இளங்கோவன் உடல், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அஞ்சலி செலுத்தினார். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவும் தெரிவித்தார். உடன் அமைச்சர்கள் பொன்முடி, தாமோ அன்பரசன், மா. சுப்பிரமணியன் உடனிருந்தனர். முன்னதாக அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் சென்னை முகலிவாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இரண்டாவது நாளாக அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.