முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல்” முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

“பா.ஜ.க. ஆட்சியின் கையில் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெ.நிவேதா

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?

நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பா.ஜ.க. ஆட்சியின் கையில் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி.

அரசியல் சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து இழிவுபடுத்திப் பேசுவது பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இவ்வளவு களேபரத்திலும் – திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நமது உறுப்பினர்கள் அனைவர் பேச்சும் தினந்தோறும் 'முரசொலி' ஏட்டில் பக்கம் பக்கமாக வெளிவந்தது. இதனைத் தினந்தோறும் படித்தபோது மனதுக்குள் கைதட்டிக் கொண்டேன். தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது” - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.