முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 லட்சத்து 96 ஆயிரம் பேர், 5 ஆயிரத்து 133 கோடி ரூபாய் அளவுக்கு பயனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயனாளிகளின் கோரிக்கையை ஏற்று காப்பீட்டுத் தொகையை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை பெறலாம். காப்பீடு தொகை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம் என்பது திமுக ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ரூ.1 லட்சம் சிகிச்சைத் தொகையாக இருந்தது. இதையடுத்து அதிமுக ஆட்சி வந்த பின்னர் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் சிகிச்சைத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தினார். இந்நிலையில் இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டதால், தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அதை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.