முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“பாஜக அலுவலகமாக மாறியுள்ள ஆளுநர் மாளிகை... வெட்கக்கேடு” - முதல்வர் ஸ்டாலின்

Angeshwar G

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தியும், 61வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் கோரிப்பாளையத்தில் முதல் நிகழ்வாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பி. மூர்த்தி, பி.டி.ஆர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

பின்னர் சாலை மார்க்கமாக முதல்வர் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்றார். அங்கு தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்துராமலிங்கத் தேவரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு நாங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளோம். 1963 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் மறைந்த நேரத்தில் அண்ணாவும் கலைஞரும் நேரடியாக வருகை தந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

MKStalin | ThevarJayanthi

1969 ஆம் ஆண்டு பசும்பொன்னிற்கு வந்து தேவரின் நினைவிடத்தை பார்வையிட்டு அதற்கு தேவையான அரசின் உதவிகளை கலைஞர் செய்தார். 2007 ஆம் ஆண்டு தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தவர் கலைஞர்” என்றார்.

இதனை அடுத்து செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆரியம் திராவிடம் பேச்சு குறித்து கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம். எல்லோருக்கு எல்லாம் உண்டு என சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. மாளிகைக்கு வெளியில் வீசப்பட்டுள்ளது. அதனுடைய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் போட்டு காண்பித்துள்ளனர். திட்டமிட்டு இந்த பொய் பரப்பப்படுகிறது. ஆளுநர் பாஜக கட்சியாக மாறியுள்ளார். ஆளுநர் மாளிகையும் பாஜகவின் அலுவலகமாக மாறியுள்ளது.. அது வெட்கக்கேடு” என்றார்.