தமிழ்நாடு

உண்ணாவிரதம் இருக்க முதலமைச்சருக்கு உரிமை உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்

உண்ணாவிரதம் இருக்க முதலமைச்சருக்கு உரிமை உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்

Rasus

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட அனைவருக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதம் இருப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் முறையீடு செய்திருந்தார். அதில் பதவிப் பிரமாணம், ரகசியக்காப்பு பிரமாணத்தை மீறி முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். பதவிப் பிரமாணத்தை மீறி உண்ணாவிரதம் இருப்பதால் தமிழக அரசை கலைத்திட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்குமாறும் மனு தாரர் கோரியிருந்தார். அப்போது, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட அனைவரும் இந்திய மக்கள் தான். அவர்கள் அனைவருக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.