தமிழ்நாடு

வைகை அணையிலிருந்து நீர்திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வைகை அணையிலிருந்து நீர்திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

webteam

வைகை அணை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்தேக்கங்களிலிருந்து நீர்திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவின் பேரில், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் மற்றும் ஆற்றுப்படுகை பா‌சனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1060 கன அடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 48 புள்ளி 33 அடியாகவும், நீரிருப்பு 1782 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 955 கன அடியாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு, பரப்பலாறு, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி நீர்தேக்கம் ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனம் மற்றும் பச்சையாறு குளங்கள் பாசன நிலுவைப் பயிர்களின் பாசனத்திற்காக பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 22-ந்தேதி தேதி முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 10-ந் தேதி வரை 110 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 9600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பரப்பலாறு அணையிலிருந்து வரும் 22-ந் தேதியிலிருந்து ஜனவரி ஐந்தாம் தேதி வரை 14 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 1223.17 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல அரியலூர் சித்தமல்லி நீர்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களின் பாசனத்திற்காக 349 புள்ளி பூஜ்யம் ஆறு மில்லியன் கனஅடி தண்ணீரை வரும் 28-ந் தேதி முதல் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சித்தமல்லி நீர்தேக்கத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் 5000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.