தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு செய்தது என்ன?

காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு செய்தது என்ன?

rajakannan

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

காவிரி தீர்ப்பு வந்தபின் அது குறித்து கருத்து கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பை வரவேற்பதாகவும் நீதிபதிகள் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து பிப்ரவரி 22ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை தமிழக எம்பிக்கள் நேரில் சந்தித்து அழுத்தம் அளிப்பது, தமிழகத்திற்கு நீர் அளவு குறைக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மார்ச் 9ம் தேதி மத்திய நீர்வளத்துறை அழைத்திருந்த கூட்டத்துக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டபடி தனது எழுத்துப்பூர்வ கருத்துகளை கடந்த 14ம் தேதி தமிழக அரசு சமர்ப்பித்தது. தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற யோசனையுடன் அதை விரைந்து செயல்படுத்துவதன் அவசியம் குறித்தும் தமிழக அரசு அதில் குறிப்பிட்டிருந்தது என தகவல் வெளியானது. 

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க செய்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் என்றும் இவ்வாரியம் அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த 5ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளி இடைவெளியின்றி இதுவரை நீடித்து வருகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றார் அதிமுக எம்பி தம்பிதுரை. 

இந்தச்சூழலில் கடந்த 15ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி ஒரு மனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மான நகலுடன் காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். காவிரி வாரியம் அமைக்க 29ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும் அது வரை பொறுமை காப்போம் என சட்டப்பேரவையில் பேசினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 

இதற்கிடையில் குறித்த காலத்துக்குள் வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரவும் தமிழக அரசு முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் காவிரி விவகாரத்தை காரணம் காட்டி அமளிகள் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராமலிருக்க அதிமுக வழி செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதை எதிர்த்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அதிமுக எம்பிக்கள் மனு அளித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்வோம் என மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.