‘கஜா’ புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது உத்தரவின் பேரில், அமைச்சர்கள், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், புயல், வெள்ளம் ஆகியவற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை உடனடியாக துவக்கினர்.
புயலினால் ஏற்படும் சேதங்களை குறைக்கும் பொருட்டும் இடர்பாடுகளை தணிக்கும் பொருட்டும், கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டனர்.
புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த கால்நடைகள், பாதிப்படைந்த வீடுகள், பயிர்கள், மரங்கள் மற்றும் சேதமடைந்த மீன்பிடி படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:-
புயலுக்கு முன் தாழ்வான பகுதிகளில் இருந்த 81,948 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக் கூடிய நோய்களை தடுக்கும் விதமாக 216 மருத்துவ முகாம்களும், நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் பாதித்த மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
110 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், முதற்கட்ட அறிக்கையின்படி சுமார் 13,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
சாலைகளில் விழுந்த மரங்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருகின்றன.