வேலூர் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்) ஒரு வாரிசு தானே என்று முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடினார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “முதல்வர் நாற்காலி மீது மு.க.ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள். சிறுபான்மை மக்களின் குரல் மேலவையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பதவி கொடுத்துள்ளோம். அதிமுகவை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். உதயநிதிக்கு சட்டப்பேரவையில் புகழ்பாடுகிறார்கள். குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக.
தொண்டர்களால் உருவான குடும்பக் கட்சி அதிமுக. குடும்பத்தில் இருப்பவர்களால் ஆன கட்சி திமுக. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் ? அவர் ஒரு வாரிசு தானே ? திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி. நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர்.
கர்நாடகாவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சி செய்து பார்த்தது. ஏன் நடக்கவில்லை ? அதிமுகவின் தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது. ஒரு காலத்திலும் அதிமுக அரசை வீழ்த்தவோ, கவிழ்க்கவோ, கட்சியை உடைக்கவோ முடியாது” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.