தமிழ்நாடு

மறைந்த செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

மறைந்த செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

Rasus

சாலை விபத்தில் மரணமடைந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் வசிக்கும் அங்கையற்கன்னி என்பவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சக ஊழியர்களான, ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபு ராஜ் ஆகியோர் காரில் பள்ளப்பட்டிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கையற்கன்னியை பார்த்துவிட்டு அவர்கள் சென்னை திரும்பிய போது பொட்டிகுளம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செய்தியாளர் ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர் ஷாலினி மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமியும் ஷாலினியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் ஷாலினி குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.