தமிழ்நாடு

சிந்தியா பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

webteam

சிந்தியா பாண்டியன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவியும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சிந்தியா பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

சென்னை அண்ணா நகரிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிந்தியாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். சிந்தியா பாண்டியனின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிந்தியா பாண்டியன் மறைவு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறும்போது, ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் நன்கு அறிமுகமானவர் சிந்தியா பாண்டியன். அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்றார்.
 
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, ‘இது எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு. பி.ஹெச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.