தமிழ்நாடு

மூடப்பட்டிருந்த பண்ணாரி அம்மன் கோயில்: செல்ஃபி எடுத்துச் சென்ற புதுமணத் தம்பதி

kaleelrahman

கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பண்ணாரி அம்மன் கோயில் முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்கள் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தை பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் என தொடர் பண்டிகை நாட்கள் உள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு அதிக அளவில் வருகை தர வாய்ப்பு உள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாளை தைப்பூசம் செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி வரை மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு முன்பு பிரதான நுழைவுவாயில் அருகே கற்பூரம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்நிலையில் கோயில் மூடப்பட்டது தெரியாமல் இன்று திருமணமான புதுமண தம்பதியினர் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து பண்ணாரி அம்மனை வழிபடுவதற்காக சென்றனர். அப்போது கோயில் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கோயில் முன்பு நின்று சாமி கும்பிட்டு விட்டு பின்னர் புதுமணத் தம்பதியர் இருவரும் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.