திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களை தரையில் அமர வைத்து, மருத்துவக் கழிவுகளை கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுமீட் என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மருத்துக் கழிவுகளை கையாளுவது குறித்து மருத்துவமனை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது மருத்துவமனை முதல்வர் அரசி, நிலைய மருத்துவ அதிகாரி ராஜ்குமார், திருவள்ளூர் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை எதிரே தரையில் அமரவைத்து பயிற்சி வகுப்பு எடுத்தனர்.
இதனால் தூய்மைப் பணியாளர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் சமமாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அரசியிடம் கேட்டபோது, இந்த விஷயத்தை தூய்மை பணியாளர்களே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பதில் கூறினார்.
இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.