தமிழ்நாடு

வெறும் கைகளால் கழிவுகள் அகற்றம்: கேள்விக்குறியாகும் துப்புரவாளர்களின் பாதுகாப்பு

வெறும் கைகளால் கழிவுகள் அகற்றம்: கேள்விக்குறியாகும் துப்புரவாளர்களின் பாதுகாப்பு

webteam

புதுச்சேரியில் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டுள்ள துப்புரவுப்பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஆய்வின் போதும் கூட வெறும் கைகளாலேயே கழிவுகளை துப்புரவுப்பணியாளர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் டெங்கு பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அந்த பணிகளை ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், திருவள்ளுவர் நகர் பகுதியில் கிரண்பேடி ஆய்வு செய்யும் போது அங்கு தேங்கியிருந்த கழிவுநீர், குப்பைகள், வாய்க்கால்களை துப்புரவு ஊழியர்கள் வெறும் கைகளாலேயே சுத்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆளுநர் ஆய்வுக்கு வரும் போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அதன் பின் தங்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் துப்புரவு பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

டெங்கு போன்ற உயிர்க்கொல்லிக் காய்ச்சல்கள் மக்களுக்கு பரவாமல் தடுக்கும் தங்கள் உடல்நலனிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இயலாமையோடு முன்வைக்கிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள். துப்புரவுப்பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டு, அவர்களுக்கு தேவையான சுகாதார உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.