தமிழ்நாடு

நகரையே தண்ணீர் ஊற்றி கழுவும் குமுளி ஊராட்சி

நகரையே தண்ணீர் ஊற்றி கழுவும் குமுளி ஊராட்சி

webteam

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி மற்றும் தேக்கடி நகர்ப்பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை போக்க சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட்டன.

கேரள மாநிலம் சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து சென்றுள்ளனர். அதிகப்படியான பக்தர்கள் தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியே வந்துள்ளனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்காக குமுளி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துப்புறவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருந்தாலும் குறைந்த பணியாளர்களால் லட்சக்கணக்கில் வந்த ஐயப்ப பகுதர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை. இதனால் குமுளி, தேக்கடி உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. சுற்றுலா தலமாக விளங்கும் குமுளி, தேக்கடி பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சபரிமலை சீசன் முடிந்ததும் குமுளி, தேக்கடி நகரை பகுதிகளை தண்ணீர் ஊற்றி  கழுவி சுத்தப்படுத்துவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டும் குமுளி ஊராட்சி மற்றும் “க்ரீன் குமுளி க்ளீன் குமுளி” திட்ட அமைப்பும் இணைந்து, குமுளி, தேக்கடி நகரை தண்ணீரால் கழுவி தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி நிர்வாக அதிகாரிகள்,  திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். சுகாதார மற்றும் துப்புறவு பணியாளர்கள் நகரை கழுவி சுகாதார சீர்கேட்டை போக்கினர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சுகாதார சீர்கேட்டையும் தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் இது போன்று சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.