ஆர்.கே.நகர் வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்புக்கு இடையே மோதல் எற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உட்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் 77.5 சதவித வாக்குகள் பதிவாகின.
வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குள் பெற்று இரண்டாவது இடத்திலும், 1,182 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 66 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.
இதற்கிடையே அதிமுக, டிடிவி தினகரன் முகவர்களுக்கு இடையே வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் மோதல் ஏற்பட்டது. மேஜைகள், நாற்காலிகள் உடைக்கப்பட்டன. தேர்தல் அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போலீசாரும் துணை ராணுவப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.