புதுக்கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டிடிவி தினகரன் அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருக்கும் முதலமைச்சர் ஆதரவாளர் வைரமுத்துவை நீக்கிவிட்டு கார்த்திகேயன் என்பரை டிடிவி தினகரன் நியமித்தார். இதையடுத்து அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இன்றைய தினம் மாலை அணிவிப்பதற்காக டிடிவி அணியைச் சேர்ந்த கார்த்திகேயன் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அதேவேளையில் அவர்களுக்கு போட்டியாக முதலமைச்சர் ஆதரவாளர் வைரமுத்துவும் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு இன்று மாலை அணித்துவித்து கூட்டம் நடத்த காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டனர். இரு அணியினிரும் ஒரே நாளில் அனுமதி கோரியதால் மோதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரு அணியினரும் கூட்டத்தை சேர்த்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி புதுக்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து புதுக்கோட்டை முழுவதும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்