ஓசூரில் சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை ஆட்களை வைத்து மகளே குண்டுகட்டாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூவேந்தர் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுப் பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராஜ். இவருக்கு ராஜ்குமார், பாபு ஆகிய 2 மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தனராஜ் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை, தனிப்பட்ட காரணங்களுக்காக மகள் தனலட்சுமிக்கு தான பத்திரமாக கடந்த சில வருடங்களுக்கு முன் எழுதி கொடுத்துள்ளார். தனலட்சுமியும் அப்போது அமெரிக்காவில் கணவர் பாலமுரளியுடன் வசித்து வந்திருக்கிறார்.
தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 80 வயதாகும் தனராஜ், திடீரென தன் மகளுக்கு தானமாக எழுதி கொடுத்த அந்த சொத்தின் பதிவை ரத்து செய்து விட்டதாக கூறியதுடன், இனிமேல் அந்த சொத்தின் முழு உரிமையும் தனக்கு எனவும் கூறி அந்த வீட்டில் வந்து குடியேறியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவரது மகள் தனலட்சுமி அவ்வப்பொழுது தனது தந்தையிடம் வந்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை பிரச்சனைக்குரிய வீட்டில் இருந்த தனராஜை, அவரது மகள் தனலட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோர் ஆட்களை வரவழைத்து வீட்டிலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றியுள்ளனர். அத்துடன் அவர் வசித்து வந்த அறையிலிருந்த சோபா, நாற்காலி, மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும் தெருவில் வீசியுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்களுக்கு அது முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தனது மகளின் அராஜக செயல்களினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தனராஜ் குற்றம்சாட்டியுள்ளார். பெற்ற தந்தை என்றும் பாராமல் காவல்துறை அதிகாரியை மகளே ஆட்களை வைத்து குண்டுகட்டாக வெளியேற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.