தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனார் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.
2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்குபின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18,300 கோடி. இந்த தொகையை மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இதை கண்டித்து ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5-ந்தேதி 60 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இல்லாததால் வகுப்புகளும் செயல்படவில்லை. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக செப்டம்பர் 7-ந்தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டம், மறியல், சிறை செல்லும் போராட்டம் என தினமும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.