சுங்குவார்சத்திரத்திலுள்ள சாம்சங் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் , ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி முதல் மீண்டும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
ஆனால், அவர்களில் பலருக்கு ஏற்கெனவே செய்த வேலையை வழங்காமல், 40க்கும் அதிகமானோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, சாம்சங் நிர்வாகமே உருவாக்கியுள்ள தொழிற்சங்கத்தில் இணைய வற்புறுத்துவதாகவும், தொழிலாளர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் நேற்றிரவு தொழிலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து 19ஆம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.