தமிழ்நாடு

குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் - சென்னையில் 3,637 பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் - சென்னையில் 3,637 பேர் மீது வழக்குப்பதிவு

webteam

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய 3 ஆயி‌ரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்‌பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மனிதநேய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து பட்டினப்பாக்கம் போலீசார், பிரதமர் உருவப்படத்தை எரித்தல், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3000-க்கும் மேற்பட்டோர் பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட முகமது கவுஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதவிர சென்னை சாஸ்திரி பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் மாணவர் கழகத்தைச் சேர்ந்த 37 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.