தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கவும், மதுக்கடையில் பார்வையாளர்களின் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முதன்மை இயக்குனர் தரப்பில் மாவட்டம் தோறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 5823 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் தமிழக அரசிற்கு வருமானம் கிடைக்கிறது. தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபானக்கடை வருமானம் உள்ளது. ஆனால் தமிழகத்திலுள்ள மதுபான கடைகளில் சட்ட விரோத மற்றும் ஒழுங்கற்ற முறையில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது.
அதில், விற்பனையாகும் மதுபானத்திற்க்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. மதுபான கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுபானக் கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை.
இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுபான கடைகள் மூலம் பெற்ற வருமானம் பற்றிய விபரம், மது அருந்துபவர்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒவ்வொரு மதுபான கடையிலும் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்கவும், கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்படவும், போலி மதுபான விற்பனையை தடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை சட்டத்தின்படி அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்கவும், வாங்கும் மதுபானத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கவும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முதன்மை இயக்குனர் தரப்பில் அனைத்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கை, அனுப்பப்பட்டுள்ளது" எனக்கூறி, அரசு தரப்பில் பிரதி தாக்கல் செய்யப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவது மற்றும் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.