கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புல்கூடு கட்ட பயன்படுத்தும் தருவம்புல் விற்பனை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு குமரி மாவட்டத்தில் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிறு புல்கூடுகள் முதல், பிரமாண்டமான புல்கூடுகள் கட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நடைமுறை இருந்து வருகிறது. இந்தப் புல்கூடுகளைக் கட்ட பயன்படுத்தும் தருவம்புல் குமரி மாவட்டத்தில் தக்கலை குமாரிக்கோவில் மலைப்பகுதி முதல் ஆரல்வாய்மொழி வரையிலுள்ள மலைப்பகுதிகளில் அதிகமாக உள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மிக சிரமப்பட்டு மலை ஏறி, இந்தப் புல்லை அறுத்து கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களுக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கு வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே ஆண்டுதோறும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் புல் விற்பனை களைகட்ட துவங்கயுள்ளது.
இந்த ஆண்டு ஒரு கட்டு புல் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு குமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் புல்லை வாங்கி செல்வதாகவும், இந்த விற்னை வரும் 23ம் தேதி வரை நடைபெறும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார். ஆரம்பக் காலத்திலேயே புல் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு அமோக விற்பனை நடைபெறும் என்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.