மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட சூளகிரி பேருந்து நிலையம் உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த சூளகிரி பேருந்து நிலையத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், பேரிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்பட பல கிராமப்பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் கடந்த 2 மாதங்களாக சரியான முறையில் பராமரிக்கப்படாமல், கண்டுக்கொள்ளப்படாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றினர். அவர்கள் சொல்வதுபோலவே அப்பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி, சுத்திகரிப்பு குடிநீர் மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை என அனைத்தும் பராமரிக்காமல் குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் என பலமுறை முறையிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் மக்கள். இனியாவது சரியான முறையில் அந்த பேருந்து நிலையம் பராமரிக்கப்படுமா, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.