கோவையை சேர்ந்த சுஜாதா என்பவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக சாக்லேட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.
பண்டிகைக் காலங்களை சிறப்புக்குரிய ஒன்றாக மாற்றுவது அப்போது கிடைக்கும் பரிசுகளுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும்தான். கிறிஸ்துமஸ் சமயத்தில் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை தரக்கூடிய வகையிலான சாக்லேட்டுகளை தயாரித்து வரவேற்பை பெற்றுவருகிறார் கோவையை சேர்ந்த சுஜாதா. கிறிஸ்மஸ் பண்டிகைக்காக வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்னரே உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம். அந்த பரிசுப் பொருட்களில் வித்யாசமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக கிறிஸ்மஸ் பெல்ஸ், கிறிஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சாக்லேட்டுகளை தயார் செய்து அசத்துகிறார்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு கிறிஸ்மஸ் மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைத்து வீடுகளிலும் உள்ள சூழலில், கிறிஸ்மஸ் மரங்களில் வழக்கமான அலங்காரம் அல்லாமல் முற்றிலும் சாக்லேட்டுகளை கொண்டு அலங்கரிக்கும் வகையில் இவர் வடிவமைத்து உள்ளது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. வீட்டில் இருந்தபடியே சாக்குலேட்டுகளை தயார் செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இவர் விற்பனை செய்துவருகிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக சாக்லேட்டுகளை தயாரித்து விற்பனை செய்துவருவதும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.