கட்சி தொடங்கும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டதன் பின்னணியில், நடிகர் சிரஞ்சீவி முக்கியப் பங்கு வகிப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. கூடவே, நடிகர் மோகன் பாபுவின் அட்வைஸும் காரணம் என்று சொல்லப்படுகிறது.
``நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்" என்று அறிவித்து அரசியல் அறிவிப்பில் இருந்து விலகினார் நடிகர் ரஜினிகாந்த்.
உடல்நிலை காரணங்களை முன்வைத்த ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், சமூக ஊடகங்களில் அவரின் முடிவு நிறைய ட்ரோலிங்கை சந்தித்து வருவதையும் கவனிக்க முடிகிறது. பலர் அவரை மிகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத அரசியல்வாதி என்றும், தைரியம் இல்லாத மனிதர் என்றும், அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பே அரசியலில் இருந்து விலகியவர் ரஜினி மட்டுமே என்றும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் அரசியலை விட ஆரோக்கியமே முக்கியம் என்றும், அரசியலில் நுழையாமல் பொது சேவை செய்யமுடியும் என்றும் கூறி அவரது முடிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். ரஜினி தனது சொந்த காரணங்களுக்காக எடுத்த முடிவை மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, அரசியலில் இருந்து விலகும் ரஜினியின் முடிவுக்கு அவரின் உடல்நிலை காரணமாக அறியமுடிகிறது. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அவரின் முடிவுக்கு வேறு மாதிரியான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சமீபத்தில் `அண்ணாத்த' ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினியை சந்தித்த அவரின் இரு சினிமா நண்பர்கள் கொடுத்த அட்வைஸ் காரணமாவே ரஜினியை இந்த முடிவை எடுக்க வைத்ததாகவும் அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த இருவர் 'மெகா ஸ்டார்' என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி மற்றும் மோகன் பாபு.
சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் சில நாட்களுக்கு முன்பு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் `அண்ணாத்த' ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை சந்தித்ததாகவும், அவர்களிடம் ரஜினி கட்சி மற்றும் அரசியல் தொடர்பாக ஆலோசனை கேட்டதாக விவரிக்கிறது ஆந்திரத்தின் செய்தி இணையதளம் ஒன்று. அந்தச் செய்தி தொகுப்பில், `` `அரசியல் என்பது ஓர் அழுக்கு படிந்தத் துறை. ஒரு திரைப்பட நடிகராக நீங்கள் அனுபவிக்கும் மரியாதையும் பாசமும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் இருக்காது' என்று சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் ரஜினியை எச்சரித்தனர்.
குறிப்பாக, சிரஞ்சீவி தெலுங்கு அரசியலில் தனக்கு நிகழ்ந்த சொந்த அனுபவத்தை ரஜினியிடம் முழுமையாக விவரித்தார். சிரஞ்சீவி, `பல அழுத்தங்களுக்கு மத்தியில் அரசியலில் வெற்றியை அடைவது மிகவும் கடினம். நீங்கள் வெற்றியை அடைந்து ஆட்சிக்கு வந்தால் பரவாயில்லை, ஆனால், தேர்தலில் வெற்றி பெறத் தவறினால், நீங்கள் இழிவாகப் பார்க்கப்படுவீர்கள். அரசியல் ஒரு நபருக்கு நிறைய உடல் மற்றும் மன அழுத்தங்களை ஏற்படுத்தும். பலவீனமான ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எனவே, இப்போது அரசியலில் நுழைவது நல்லதல்ல' என்று ரஜினியிடம் கூறினார்.
இப்படி இருவரும் மனதை மாற்றியதால் ரஜினி இறுதியாக அரசியலில் இருந்து விலக ஒப்புக்கொண்டார். எனினும் ஏற்கெனவே கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருந்ததால், இந்த கட்டத்தில் அரசியலில் இருந்து விலகினால் அது விமர்சனத்தை ஏற்படும் என ரஜினி அச்சம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையேதான், ரஜினியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் உடல்நிலை காரியங்களை மையப்படுத்தி ரஜினி, ஊர் திரும்பியதும் அரசியல் அறிவிப்பில் இருந்து பின்வாங்கி விட்டார்" என்கிறது அந்தச் செய்தி தொகுப்பு.
தங்களுக்கு கிடைத்த சோர்ஸ் மூலம் இந்தத் தகவலை திரட்டியதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி, சிரஞ்சீவி, மோகன் பாபு ஆகியோரிடம் இருந்த எந்தப் பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.