தமிழ்நாடு

"மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; பள்ளி முதல்வர் உட்பட மூவர் கைது”-டிஜிபி அறிவிப்பு

ச. முத்துகிருஷ்ணன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்நிலையில் கலவரம் நடந்த பள்ளியை தமிழக உள்துறை செயலர் பனிந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த போது மாணவியின் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

பின்னர் பேசிய உள்துறை செயலர் பனிந்திர ரெட்டி, “மாணவியின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சம்பவத்தில் அனைத்து சந்தேகங்களும் களையப்பட வேண்டும் அரசின் எண்ணம். அரசு அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்யும். ஒரு தனிப்பட்ட பள்ளியில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை தனிப்பட்ட பார்வையில் பார்க்க வேண்டும். எல்லா பள்ளிகளுக்கும் இதுபோன்ற சூழல் இருக்கும் என் கூறமுடியாது. அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு “மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடம் தாக்குதல் தனிவழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.