தமிழ்நாடு

“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்

“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்

webteam

அப்போது வெளியே சொல்லும் அளவிற்கு துணிச்சல் இல்லை, இப்போது எனக்கு பயம் இல்லை என பாடகி சின்மயி கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, “ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என பலரும் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. பல முன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆண்களுக்கு இதேபோல் நடக்கிறது. ஆண்கள் எங்கே போய் சொல்லியிருக்கிறீர்கள்?. சின்ன வயதில் நடந்த கொடுமையெல்லாம் ஆண்கள் சொல்லியிருக்கிறார்களா?. இதுதனிப்பட்ட ஒரு துறையில் நடக்கிற விஷயமில்லை, இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது. அதனை முதலில் சரிசெய்தால், சமூகம் தூய்மையானதாக இருக்கும். 

நான் தெரிவித்த குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கவில்லை. ‘சமீபகாலமாக என்னை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவும் ஒன்று’ என்றுதான் கூறினார். என்னுடன் இருக்கும் பாடகிகளுக்கு குரல் இல்லை. கணவன், தாய் உள்ளிட்டோரை தாண்டி வரவேண்டும் என்ற பிரச்னை உள்ளது. அவர்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். இது என்னோட சக பாடகிகளுக்கு நடந்துள்ள விஷயம். எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. 

தமிழ் மட்டுமல்ல 8 மொழிகளில் பாடியிருக்கிறேன். 96 படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியுள்ளேன். படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் நல்ல பாடகிதான். நிறைய படங்களில் டப்பிங் செய்துள்ளேன். எனக்கு பப்ளிசிட்டி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாளையில் இருந்து எனக்கு யாரும் பாட வாய்ப்பு கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. எனக்கு இருக்கும் குரலை வைத்து எப்படியோ பிழைத்துக் கொள்வேன். ஏனெனில் என் பக்கம் உண்மை இருக்கிறது. எனக்கு எவ்விதமாக கவலையும் இல்லை. நான் உண்மையைதான் சொல்கிறேன் என்று வைரமுத்துவிற்கே தெரியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும்” என்று கூறியுள்ளார்.